சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கடலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மாவட்ட எல்லை பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று 26 ஆக இருந்த நிலையில் கடந்த ஆறு நாட்கள் தொடர்ந்து பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் பெருமூச்சு விட்டு வந்த்து. இதற்கிடையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பி ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக ஆனது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் கரோனா நோய் தொற்று அடுத்தடுத்து பலரை தாக்கிய நிலையில் அங்கிருந்து கடலூர் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடுக்கு வியாபார ரீதியாகவும் பணி நிமித்தமாக சென்று வந்தவர்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்த உத்தரவிட்டது.
இதுவரை மாவட்டத்தில் 717 பேர் கண்டறியப்பட்டு கடலூர், விருத்தாசலம், வேப்பூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே விருதாச்சலத்தில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த 27 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 19 பேருக்கு கரோனா என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் விருதாச்சலம், வடுகாளா நத்தம், விளாங்காடுட்டூர். கடலூர் அருகே சி.என் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. நோய்த்தொற்று பாதித்த 19-பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் ஒரே நாளில் 19 பேர் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து பாதிப்பு ஏற்பட்டாலும் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளதால் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சியர் அன்புசெல்வம் மேற்பார்வையில் கடலூர், சிதம்பரம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டு வெளியிலிருந்து வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 48 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் 19 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று பேரும் தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் பாதிப்புகள் எண்ணிக்கையை 48 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆரஞ்சு மண்டலமாக இருந்நு தற்போது சிவப்பு மண்டலத்தை நோக்கி செல்கிறது.