Skip to main content

கூலித் தொழிலாளியின் மனிதநேயம்; தலைமை செயலாளர் பாராட்டு

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

cuddalore district daily wage great action chief secretary congrats

 

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். அதில், “உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் மக்களை சிரமத்திற்கு ஆளாக்காத வகையில் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் மயானங்களை அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஏற்கனவே மயானங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. பல இடங்களில் உள்ள மயானங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. அதிலும் குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நடைபெறும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. எனவே சுற்றுச்சுவர், கொட்டகை அமைத்து பூச்செடிகள் மற்றும் மரங்களை நடுவதன் மூலம் 'பசுமை மயானங்களை' உருவாக்கலாம்.

 

மக்கள் அமருவதற்கு இருக்கை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகளை வழங்க உங்கள் பகுதியில் உள்ள சேவை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் சேவையையும் பயன்படுத்தலாம். இது நிச்சயமாக மயானங்களின் ஒட்டுமொத்த சூழலையும் மேம்படுத்தும். இறந்தவர்கள் உடலுடன் வரும் பொதுமக்களுக்கு இது நிவாரணம் அளிக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற சிறந்த மயானங்களை நீங்கள் உருவாக்கலாம் மற்றும் அதைப் பிரதிபலிக்கும் வகையில் மற்றவர்களை ஊக்குவிக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டின் பிம்பத்தையும் மேம்படுத்த இது பெரிதும் உதவும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தயவு செய்து செய்யுங்கள்” எனத் தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியம், அரங்கூர் ஊராட்சியில் வசிக்கும் விவசாய தினக்கூலி அர்ச்சுனன் அதே ஊரில் அமைக்கப்பட்டிருந்த மயானக் கொட்டகையையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் தன்னுடைய சொந்த செலவில் முற்புதரை அகற்றி இடத்தை சமன் செய்து மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் வைத்து அழகாக பராமரித்து வருகிறார்.

 

இது குறித்து அரங்கூர் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு செய்து அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு தென்னை மரம், மாமரம் போன்ற நிழல் தரும் மரங்களும் பலன் தரும் பழ மரங்களும் நடப்பட்டு இருப்பதைப் பற்றி மாவட்ட ஆட்சியர் தலைமை செயலாளர் இறையன்புவிற்கு அறிக்கை அனுப்பியிருந்தார். மேலும் அதில் அம்மரங்களையெல்லாம் அ.அர்ச்சுனன் (வயது 70) என்பவர் நட்டு பராமரிப்பு செய்கிறார் என்கிற தகவலையும் தெரிவித்திருந்தார்.

 

விவசாயக் கூலியாக இருந்தாலும் மயானத்தில் மரங்களை நட்டு மரகதச் சோலையாக மாற்றிய அ.அர்ச்சுனன் என்பவரை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பாராட்டி ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார். மேலும் அந்த மயானத்தில் சுற்றுச்சுவர் கட்டி, பாசன நீர் வசதி ஏற்படுத்தி நன்றாகப் பராமரிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு  கடிதமும் எழுதியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.