Skip to main content

என்.எல்.சி அதிகாரிகள் நடந்து கொள்வது சரியா? கொந்தளிக்கும் கடலூர் மக்கள்

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
n

 

ஊரடங்கினால் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முடங்கிக் கிடக்கிறது.  அரசு செய்யும் உதவிகள் மக்களின் தேவைகளை முழுவதும் பூர்த்தி செய்ய இயலவில்லை.  எனவே,  இதைக் கருத்தில் கொண்டு மக்கள் பசியில் வாடக்கூடாது என்று நல்ல மனம் கொண்ட தொழிலதிபர்கள், வியாபாரிகள்,  அரசியல் கட்சிகள்,  தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள்  என பல்வேறு அமைப்புகள் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். ஆனால்,  கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் மக்களின் கஷ்டத்தை சிரமத்தை கண்டுகொள்ளாமல் மெளனம் சாதிக்கின்றன.


இதுபற்றி கடலூர்  திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், மாவட்டத்திலுள்ள என்.எல்.சி நிறுவனம் மற்றும் கடலூர் சிப்காட் தொழில் வளாகத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கரோனா நோய் பரவல் காரணமாக வருமானம் இழந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கும்  பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க முன் வர வேண்டும்.  ஆனால் அந்த நிறுவனங்கள் கண்டும் காணாமல் மௌனமாக இருப்பது வேதனையை தருகிறது.
 

இந்தியாவிலேயே அதிக லாபம் ஈட்டித்தரும் மத்திய அரசின் என்.எல்.சி நிறுவனம். அந்த நிறுவனம் உருவாவதற்காக அப்பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வாழ்வாதார விவசாய  நிலங்களையும், வீடுகளையும் குறைந்த விலைக்கு வழங்கிவிட்டு அகதிகள் போன்று பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.


அப்படிப்பட்ட மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார பேரிடர் காலத்தில் கூட அந்த என்.எல்.சி நிறுவனம் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் உதவிகளை செய்ய முன்வர வேண்டும். மேலும், என்எல்சி சார்பில் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சிறப்பு மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும்.  அதேபோல் கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

 

அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் சமூகப் பொறுப்பு உணர்வு திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும். இந்த நிறுவனங்கள் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு மத்திய மாநில அரசுகள் தொழில் தொடங்கும்போது பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.  மேலும் இப்படிப்பட்ட தொழிற்சாலைகள் பேரிடர் காலங்களில் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து கொடுக்க வேண்டும். அப்படி மக்களுக்கு உதவி செய்வதாக இந்த நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு பொய்யான புள்ளி விவரங்களை மட்டும் அளிக்கின்றன.  காரணம்,  இந்த பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மேற்படி நிறுவனங்களிடம் வலியுறுத்தி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறுவது இல்லை.  அதேபோல் அரசு உயர் அதிகாரிகளும் இந்த நிறுவனங்களை நிர்பந்தப்படுத்துவதில்லை.  அதனால் அவர்கள் மக்களை பற்றி அவர்கள் படும் சிரமங்களைப் பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக ஏசி அறைகளில் வாழ்கின்றனர்.  மனிதாபிமான அடிப்படையில் உடன் உதவி செய்ய முன்வராமல் இப்படிப்பட்ட தொழிலதிபர்கள் என்எல்சி அதிகாரிகள் நடந்து கொள்வது சரியா? என கேள்வி எழுப்புகிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.

 

சார்ந்த செய்திகள்