கோவை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய இளைஞரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ சீனிவாசன் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கையுடன் ஒரு கேள்வியை வைத்தார்.
''ஒரே பில்லில் ஒரு ஃபேமிலிக்கு டிஃபரண்ட் டிஃபரண்டாக ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. அதே நேரம் பன்னுக்குள்ள கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி கொடுக்க வேண்டும். கஸ்டமர் என்ன சொல்கிறார்கள் என்றால் 'கிரீமையும் ஜாமையும் கொண்டு வா நானே பன்னுக்குள் வைத்துக் கொள்கிறேன்' என்கிறார்கள். கடை நடத்த முடியல மேடம். அதனால் ஒன்றாக எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி ஜாஸ்தி செஞ்சுருங்க'' என கொங்கு தமிழில் கோரிக்கை தெரிவித்திருந்தார். இதனை கேட்டு அரங்கம் சிரித்தது.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோவை மாவட்டம் சூலூர் ஊஞ்சப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. அதிலும் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் முன்வைத்த கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ''அவர் பெரிய தொழிலதிபர். ரொம்ப நாளாக இருக்கிறார். கேள்வி கேட்டார் ஆனால் அதற்கு நாங்கள் பதில் கொடுக்கவில்லை. உங்கள் மூலமாக பதில் சொல்கிறேன். குழுமம் இந்த விஷயங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜனரஞ்சகமாக பேசுவதால் ஜிஎஸ்டிக்கு விரோதமாக இருக்கக்கூடியவர்களுக்கு இது ஆதாயமாக இருக்கும். பார்த்தீர்களா 'ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டு விட்டார்' என்று பேசுவார்கள். நான் யாருடைய கமெண்ட்க்கும் கவலைப்படுவதில்லை. தப்பு ஒன்றும் இல்லை அவர் அவருடைய ஸ்டைலில் பேசுகிறார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக டீட்டைலாக எதற்கு எதற்கு என்ன ரேட் போட வேண்டும் என்பதை அமைச்சர்கள் குழுமம் ஒன்று ஆய்வு செய்கிறது'' என்றார்.
அதன் பிறகு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கருமத்தம்பட்டி சென்ற அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அருண்சந்திரன் என்ற இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார். செல்போன் உதிரிபாகமான செமி கண்டக்டர் உதிரி பாகத்தை வெளிநாடுகளில் தொடர்ந்து இறக்குமதி செய்வது ஏன்? என்றார். இந்த கேள்வியால் ஆவேசமடைந்த அமைச்சர் இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு அதன் பிறகு டெல்லி வந்து நேரில் விவாதம் செய்து கொள்ளுமாறு பேச, அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமனிடம் அந்த இளைஞர் கேள்விகளை கேட்க முயன்ற நிலையில், கோபமடைந்த அமைச்சர் செய்தியாளர்களை பார்த்து அதை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என எச்சரித்தார். பின்னர் கேள்வி எழுப்பிய அருண்சந்திரனை கோவை கருமத்தம்பட்டி போலீசார் அழைத்து சென்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.