கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் தாணிக்கண்டி என்ற பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் யாரும் சேரவில்லை. இதன் காரணமாக பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஆகிய இருவரும் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி நடந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில், தாணிக்கண்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியை ஒருவர் இந்த பணியிடத்தை தேர்வு செய்தார். அதே போல் கடந்த 30 ஆம் தேதி நடந்த இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் உதவி ஆசிரியை ஒருவரும் இந்த பணியிடத்தை தேர்வு செய்தார்.
இப்பள்ளியில் ஒரு மாணவர்கள் கூட இல்லாத நிலையில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தாணிக்கண்டி பள்ளியைத் தேர்வு செய்த ஆசிரியர்கள் இருவரும் ஏற்கனவே ஒரே பள்ளியில் பணியாற்றியவர்கள் ஆவர். தற்போது இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பணியிட மாறுதலானது இவர்களின் வீட்டிற்கு அருகில் இருப்பதாகவும் இந்த பணியிட மாறுதல் குறித்து ஆசிரியர்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
இந்த பணியிட மாறுதல் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "சம்பந்தப்பட்ட தொடக்கப் பள்ளியை மூட தற்போது வரை எந்த உத்தரவும் வரவில்லை. எனவே இடமாறுதல் கலந்தாய்வின் போது பள்ளியில் உள்ள பணியிடம் காண்பிக்கப்பட்டது. இந்த ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பட்சத்தில் இப்பள்ளியைத் தேர்வு செய்தவர்களுக்கு வேறு பள்ளிக்கு மாற்றுப் பணியிடம் வழங்கப்படும்" எனக் கூறினர்.