அண்மையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் பிரபல பைக் ரேஸ் யுடியூபர் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கிச் சென்றபோது, வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்தார். அப்பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இரண்டு முறையும் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 'விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும். டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும் எனக் கடுமையான கருத்தை நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தற்பொழுது புழல் சிறையில் இருக்கக்கூடிய டிடிஎஃப் வாசனுடைய நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அவருடைய வழக்கு விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக விசாரணையில் ஆஜராகிய டி.டி.எப் வாசனுக்கு மேலும் பதினைந்து நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படுவதாகவும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே டிடிஎஃப் வாசனுக்கு பத்தாண்டுகள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு சறுக்கலாக அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.