கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள உளுந்தாண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 48 வயது ராஜா. இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த பதினான்காம் தேதி நீதிமன்றத்திற்கு வேலைக்குச் சென்று வருவதாக மனைவியிடம் கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரது மனைவி ஜெயராணி தனது கணவர் ராஜாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், விழுப்புரம் குடும்பநல கோர்ட்டில் உதவியாளராக பணிபுரியும் கருணாகரன் என்பவரது மனைவி விஜயமலர் (38) என்பவரது வீட்டில் ராஜா இறந்துகிடப்பதாக ஜெயராணிக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, வேலைக்குச் சென்ற தனது கணவர், விழுப்புரத்தில் உள்ள விஜயமலர் வீட்டில் இறந்து கிடந்தது ஏன்? இதற்கு என்ன காரணம்? இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஜெயராணி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்குப் பதிவுசெய்து, ராஜாவின் இறப்பு எப்படி நடந்தது? ராஜா ஏன் விஜயமலர் வீட்டிற்குச் சென்றார்? அவர் இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். நீதிமன்ற ஊழியர், இன்னொரு நீதிமன்ற ஊழியரின் வீட்டில் இறந்துகிடந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.