சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் குடியிருப்பில் இருந்த D பிளாக் கட்டடத்தில் 24 வீடுகள் தரைமட்டமாகின. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்று தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வீடுகள் இடிந்து விழுந்த இடத்தில் ஐந்து தீயணைப்புப்படை வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், "இடிந்து விழுந்த D பிளாக் கட்டடத்தில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்டதால் 24 குடும்பத்தினரும் வெளியேற்றப்பட்டனர். 24 குடும்பத்தினரும் வெளியேறிய நிலையில் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது; உயிர்ச்சேதம் இல்லை. இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது" எனத் தெரிவித்தனர்.
குடிசை மாற்று வாரியத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அரசு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.