கரோனா விழிப்புணர்வு கவிதை, ஓவியம் வரைந்தால் பரிசு வழங்கப்படும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை மத்திய அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.
மேலும் தனியார் நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில், தனியார் நிறுவனங்களை அறிவுறுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. அதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று 14 மணி நேர சுய ஊரடங்கு இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "விடுமுறையில் உள்ள மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு பற்றி கவிதை மற்றும் கட்டுரை, ஓவியங்களை வரைந்தால் பரிசு வழங்கப்படும். புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் படைப்புகளை வாட்ஸ் அப் எண்ணில் அனுப்பலாம். இதற்கான வாட்ஸ் அப் எண்கள் 98651- 20738, 94434- 88869 ஆகும். மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும்." இவ்வாறு ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.