சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ஒட்டுமொத்த உறவினா்களும் நண்பா்களும் புடை சூழ நடத்தும்போது கிடைக்கும் மகிழ்ச்சியையும் ஆனந்தமும் எல்லையில்லாதது. அதேபோல் தான் சமீபத்தில் நடக்கும் திருமணங்கள் எல்லாம் நிச்சயிக்கப்பட்டது சொர்க்கத்தில் என்றிருந்தாலும் அது நடப்பது ஏதோ கரோனா அச்சத்தில், அதுவும் விரல் விட்டு எண்ணக்கூடிய உறவினா்கள் மத்தியில் தான். இப்படித்தான் கடந்த சில நாட்களாக அரசின் உத்தரவுக்கு ஏற்ப திருமணங்கள் நடக்கிறது.
இதில் நேற்று 26-ம் தேதி குமரி மாவட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. இதில் பெரும்பாலான திருமணங்கள் அரசின் உத்தரவை மதித்து ஒரு சில உறவினா்களோடு பொழுது விடிவதற்குள் சேவல் கூவுவதைச் சாட்சியாக வைத்து நடந்தது. அப்படி அதிகாலையில் நடந்த ஒரு திருமணம் அதன் தம்பதிகள் தற்போதைய சூழலுக்கு ஒரு முன்னுதாரண விழிப்புணா்வைக் காட்டியிருக்கிறார்கள்.
பெயா் சொல்ல விரும்பாத அந்த திருமண தம்பதிகளுக்கு மாலையில் எளிய முறையில் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தது. பின்னா் இரவு வழக்கம் போல் தம்பதிகள் வாழ்க்கையின் முதல் அடியை எடுத்து வைப்பதற்கான தருணத்துக்காக உறவினா்கள் முறைப்படி சம்பிராயத்துடன் அவா்களைப் பள்ளியறைக்குள் அனுப்பி வைத்தனா்.
அப்போது ஆயிரம் கனவுகளோடு அறைக்குள் சென்ற தம்பதிகள் ஒரு கணம் யோசித்த நிலையில் திடீரென்று மணமக்கள் நாம் இருவரும் படித்தவா்கள் இன்றைக்கு உலகமே கரோனாவால் பாதிக்கபட்டு கொண்டியிருக்கிறது. நம் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் நடக்கிறார்கள். அது கவலையாக இருக்கிறது. இதனால் நம்முடைய குடும்பத்தில் நம்மால் விழிப்புணா்வை ஏற்படுத்துவோம். அதற்காக இன்றைக்கு நமக்கு முதலிரவு தேவையில்லை. கரோனா வைரஸை துரத்துவதற்காக சில நாட்களுக்கு முகத்தில் மாஸ்க் அணிந்து வீட்டுக்குள்ளே தனிமையில் இருப்போம். நம்முடைய விழிப்புணா்வை மற்றவா்களும் புரிந்து கொள்ளட்டும் என்றவள், கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு மாமியாருடன் மச்சினிச்சியுடன் தூங்கச் சென்றாள்.
இதைக் கேட்டு தலையில் மணமகன் கை வைத்தாலும் கடைசியில் மனைவியின் விருப்பத்தை ஊக்கப்படுத்தினார். கரோனா விழிப்புணா்வின்றி நடக்கும் மக்கள் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம் குடும்பத்தைக் காக்க வேண்டும், நம் தெருவைக் காக்க வேண்டும், நம் ஊரைக் காக்க வேண்டும், நம் மாநிலத்தைக் காக்க வேண்டும், நம் நாட்டைக் காக்க வேண்டும், நம் உலகத்தை காக்க வேண்டும் என்பதுதான் அந்த மணமக்களின் வேண்டுகோள்...