நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் ஒரே இடத்தில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியர் அருண் தம்புராஜும், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸும் தொடங்கி வைத்தனர்.
தமிழத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. நேற்று மட்டுமே எட்டாயிரத்தை தாண்டியிருக்கிறது. அதிகபட்சமாக திருச்சியில் மட்டுமே 184 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கரோனா வீரியத்தின் தீவிரத்தை உணர்ந்து நேற்று முன்தினம் முதல் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று முழுநாளும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அரசின் உத்தரவை தொடர்ந்து 15 வயது முதல் 18 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கப்பட்டது. நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று கோவேக்சின் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களை ஊக்குவிக்கும் வகையில் டிபன் பாக்ஸ் பரிசாக வழங்கி கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வுக்கு முன்னதாக நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர், "நாகை மாவட்டத்தில் உள்ள 15 முதல் 18 வயதுடைய 25,089 பேருக்கு கரோனா தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது. அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" கூறினார்.