
மாவட்ட ஆட்சியர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் தமிழகத்தில்தான் செய்யப்படுகிறது. வெளி மாநிலத் தொழிலாளர்களை வைத்து தொழில் செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம்கள் மூலம் கரோனா தடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார்களோ அதன்படிதான் தொற்றைக் குறைக்க முடியும். அரசு எடுத்த தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சொட்டு மழை நீரைக் கூட வீணாக்காமல் சேமிக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்சியர்கள், முன் களப்பணியாளர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றார்.