திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் பயிலும் 8 மாணவர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை 2,500 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தினசரியாகவும், விடுதியிலும் தங்கி பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில், பனிரெண்டாம் வகுப்பு விடுதி மாணவர்கள் 5 பேருக்குத் தொடர் காய்ச்சலால் அவதியுற்றனர். அதேபோல, தினசரி வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் 3 பேர் என 8 பேருக்கும் தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து விடுதி மாணவர்களைத் தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்ததில் 5 பேருக்கும் கரோனா தொற்று என பரிசோதனை முடிவில் தெரியவந்தது. அதேபோல, தினசரி வீட்டிலிருந்து பள்ளி வந்த ப்ளஸ் 2 மாணவர்கள் மூவருக்கும் என மொத்தம் 8 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
அப்பள்ளியில் பயிலும் ப்ளஸ் 2 மாணவ, மாணவிகள் 600 பேருக்கும் சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மைய வட்டார மருத்துவர் டாக்டர் மதிவாணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர்கள் (பி.சி.ஆர்.) கரோனா பரிசோதனையைப் பள்ளி வகுப்பறையிலே நடத்திவருகின்றனர்.
கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளான பள்ளி மற்றும் அனைத்து விடுதிகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய இன்று 20ஆம் தேதி முதல் 22வரை என 3 நாட்களுக்குப் பள்ளி மற்றும் விடுதிகள் விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.