இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,242 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்புக் கல்லூரிகள் அனைத்திலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள், செய்முறை தேர்வுகள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தேர்வு கால புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பணியாளர்களும் மே மாதம் 3 ஆம் தேதி வரை, வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும் என்றும், தேவைப்படும்பட்சத்தில் அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் எனவும் சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.