நாடு முழுவதும் 19 மாநிலங்களில் கரோனா என்பது அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1000-ஐ நெருங்கும் வகையில் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் 395 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 107 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 பேருக்கும் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 12,564 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 460 மாணவிகளுக்கும் கடந்த 11ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) முதற்கட்டமாக 20 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அன்றே இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில், மேலும் 36 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து அங்கு பரபரப்பைக் கூட்டியது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றோர்கள் 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தஞ்சையில் நான்காவதாக மேலும் ஒரு பள்ளியில் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.