கோடை காலத்தையொட்டி மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதியில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில்தான் கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் நேற்று (30.05.2024) மயங்கிய நிலையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் கண்டறிந்தனர். உடன் 4 மாத குட்டி யானையும் இருந்துள்ளது.
இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதே சமயம் தாயை எழுப்ப குட்டி யானையும் பாசப் போராட்டம் நடத்தியது. இதற்கிடையே தாயிடம் பால் குடிக்க முயன்ற குட்டி யானைக்கு லாக்டோஜன் மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை வனத்துறையினர் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கிரேன் மூலம் யானை தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது குட்டி யானை தாய் யானையிடம் பால் குடிக்க முடியாததால் கிரேன் மூலம் தாய் யானை தூக்கி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர் சிகிச்சையின் பலனாக கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்ட யானை சற்று உடல்நலம் தேறிய நிலையில் உணவைத்தானே உட்கொண்டு வருகிறது. சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் யானையும் குட்டியும் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். தாய் யானை எழுந்து நின்றதும் அதன் அருகில் ஒடி வந்து குட்டியானை பால் குடித்தது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வேகமாக பரவி வருகிறது. யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.