வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தமிழகம்-இலங்கை கடற்கரை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது.
குறிப்பாக அடையாறு, திருவொற்றியூர், கிண்டி, ஈசிஆர், சோழிங்கநல்லூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நந்தனத்தில் 45.5 மில்லி மீட்டர் மழையும், மீனம்பாக்கம் 39.6 மில்லி மீட்டர், தரமணி 39.5 மில்லி மீட்டர், நுங்கம்பாக்கம் 24.2 மில்லி மீட்டர் ஆகிய அளவில் மழை பதிவாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.