
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள திட்டை ஊராட்சி தலைவராக இருக்கும் பட்டியல் இனத்தைச் சார்ந்த ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்தது தொடர்பாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஊராட்சி செயலாளர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது; கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற தெற்குத் திட்டை ஊராட்சி மன்றக் கூட்டத்தில் அதன் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர். கூட்டம் முடிந்த பிறகு ஊராட்சி செயலாளர் தனது பணியை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அதன் பிறகு, ஊர் பிரச்சனைக்காக மீண்டும் அனைவரும் ஒன்றுகூடி பேசினர். அப்போது ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணகுமார் திட்டமிட்டு தனது மனைவியை தரையில் அமரச் செய்து அதைத் தனது செல்லில் பதிவு செய்து கொண்டார்.
ஊராட்சி நிர்வாகத்தை அவரே கவனித்து வரும் நிலையில் துணைத் தலைவருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவரை பணியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இதற்கு துணைத் தலைவர் ஆட்சேபனை தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் எவ்வித தொடர்பும் இல்லாத ஊராட்சி செயலாளர் மீதும் இணைத்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர்கள் சன் முத்துகிருஷ்ணன், த.அசோக்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது; தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை அவமதித்ததாக ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். புதுப்பேட்டை ஊராட்சி செயலாளரான சிந்துஜா கூடுதல் பொறுப்பாக தெற்குத் திட்டை ஊராட்சியையும் கவனித்து வந்தார். இந்த விவகாரத்தில் உண்மையிலேயே குற்றம் நடைபெற்றதா என்பதை மாவட்ட ஆட்சியர் விசாரிக்க வேண்டும். பட்டியலின மக்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதே நேரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க தனிக்குழு அமைக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இதனிடையே கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர வைக்கப்பட்டதற்கு மாவட்டத்திலுள்ள 683 பஞ்சாயத்துகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி தலைவர்களுக்கு ரூபாய் 50,000 மாத ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சிக்கு வழங்கவேண்டிய மாநில நிதிக்குழு மானியம் உடனடியாக விடுவிக்க வேண்டும். ஊராட்சி தீர்மானம் இல்லாமல் கிராம சபை ஒப்புதல் இல்லாமல் வழங்கப்பட்ட பசுமை வீடு உள்ளிட்ட திட்டத்திற்கான ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும். பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கும் நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகம் ரூபாய் 5 லட்சத்தை ஒவ்வொரு ஊராட்சிக்கும் நிதி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.