சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினைத் தொடர்ந்து சென்னைக்கு அருகில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், பெருகிவரும் வளர்ச்சிக்கேற்ப எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்கும் பொருட்டும், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் பேரூரில், 4 ஆயிரத்து 276 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு இன்று (21.08.2023) அடிக்கல் நாட்டினார்.
இது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமையவுள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 இலட்சம் மக்கள் பயன் அடைய உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், சென்னையிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் துணை தூதர் திரு.தாகா மசாயுகி, இந்தியாவிற்கான ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைமை அலுவலர் திரு.சைட்டோ மிட்சுனோரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.