திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து, டெல்லி சென்று திரும்பியதாக 8 பேரை கடந்த ஏப்ரல் 1ம் தேதி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தினர். அதில் இரண்டு பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து இரண்டு பேரும் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மற்ற 6 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி, 8 பேரின் குடும்பத்தை சேர்ந்த 52 பேரை வாணியம்பாடி தனியார் கல்லூரி மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கரோனா நோய் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களை சேர்ந்த 12 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வு அறிக்கை முடிவில் கரோனா நோய் தொற்று இல்லை என்று அறிக்கை வந்தது.
இதன் அடிப்படையில், 6 பேரின் குடும்பத்தை சேர்ந்த 40 பேருக்கு ரத்த மாதிரிகளை சேகரிக்காமல் கடந்த 9ம் தேதி (6 நாட்கள் மட்டுமே) சுகாதாரத் துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆலோசனையின்படி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல், 8 பேர்களின் குடும்பத்தை சேர்ந்த 52 பேர்களை பூங்கொத்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
இவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 14 நாட்கள் சுகாதாரத்துறை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலையில், 6 நாட்களில் எதற்காக விடுவிக்கப்பட்டனர் என்ற கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட 40 நபர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடைய ரத்த மாதிரிகளை சேகரித்து கரோனா நோய் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் முடிவில் வாணியம்பாடி கோட்டை பகுதியை சேர்ந்த 48 வயது பெண்மணி ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்ணுக்கு நோய் தொற்று உறுதியானதால் நோய் பரவாமல் இருக்க ஏப்ரல் 16 ந்தேதி முதல் நகராட்சி பகுதி, முழு தடை செய்யப்பட்ட பகுதியாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.