காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிறுபினாயூர் என்ற கிராமத்தில் திருவந்தார் என்ற இடத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்த சூழலில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் அங்கிருந்த குடிநீர் தொட்டியில் இருந்த நீரை அருந்தியுள்ளனர். சமைப்பதற்காகவும் அந்த தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த நீரில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து தொட்டியை பார்த்தபோது அதில் மனிதக் கழிவு இருந்ததாக கருதப்பட்டது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளித்த நிலையில், டிஎஸ்பி ஜுலியர் சீசர் மற்றும் ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொட்டியில் உள்ள நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்றது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சென்று தண்ணீர் தொட்டியை ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து பள்ளி மாணவர்கள், சத்துணவு அமைப்பவர்கள், பள்ளி பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “பள்ளியில் புதிதாக ஒரு குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேலும் சின்டெக்ஸ் டேங்க் ஒன்றும் உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அதற்கு என தனி தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டது. தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டி இருந்து வந்துள்ளது. குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கவில்லை அந்தத் தொட்டியில் காகம் அழுகிய முட்டையை கொண்டு வந்து போட்டிருக்கலாம். முட்டை ஓடு உடன் கூடிய அழுகிய முட்டை இருந்துள்ளது. இதனால் குடிநீரில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. நாளை குடிநீர் தொட்டி இடிக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருவந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியை இடிக்க மாட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டி ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டது.