Skip to main content

எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.யிடம் புகார்; புகழேந்தி அதிரடி!

Published on 15/06/2022 | Edited on 15/06/2022


 

Complaint to SP on Edappadi Palanisamy;  Pugazhendhi pressmeet

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சட்ட விரோதமாகப் பேசிய அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரு புகழேந்தி, சேலம் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

 

அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, முன்னாள் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அய்யப்பமணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்விடம், முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மீது ஒரு புகார் மனு அளித்தனர். 

 

புகாரின் சாராம்சம் குறித்து பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியது, ''சேலம் நிலவாரப்பட்டியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள், பொதுமக்கள் முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், தமிழகத்தை ஒரு முதல்வர் ஆட்சி செய்யவில்லை. 4 முதல்வர்கள் ஆட்சி செய்கின்றனர். 

 

முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருடைய மகன், மருமகள், மனைவி ஆகியோரின் பெயரை ஆகியோர் தமிழகத்தை ஆட்சி செய்வதாக கூறியுள்ளார். மேலும், முதல்வருக்கு ஒன்றும் தெரியாது என்றும் பேசியுள்ளார். இந்த பேச்சு, ஜனநாயகத்துக்கு விரோதமானது. 

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் மூலம் பெற்ற முதல்வர் பதவியை அசிங்கப்படுத்தி இருக்கிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், இந்த பேச்சு அமைந்துள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசும் இவர், பிரதமர் மோடியைப் பற்றி பேசுவாரா? 4 பிரதமர் ஆள்கிறார்கள் என்று கூறியிருந்தால் இவர் இங்கு இருக்க முடியுமா? சட்ட விரோதமாப்க பேசிய எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார் புகழேந்தி. 


 

சார்ந்த செய்திகள்