சட்டமன்றத்தில் தொழிலாளர் மானியக் கோரிக்கையில் அரசு கொண்டு வந்துள்ள தீர்மானம் ஒட்டுமொத்தமாக தொழிற்சங்கத்தினரைக் கொதிப்படைய வைத்திருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. அமைப்பின் நிர்வாகக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 17, 18 தேதிகளில் ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். காசி விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. அமைப்பின் தேசியத் துணைத் தலைவர் திருப்பூர் தொகுதி எம்.பி. கே.சுப்பராயன், ஏ.ஐ.டி.யு.சி. தேசியச் செயலாளர்கள் டி.எம்.மூர்த்தி, வஹிதா நிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன் வேலையறிக்கை சமர்ப்பித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, துணைத் தலைவர்கள் ஏ.எஸ்.கண்ணன், மீனாள் சேதுராமன், எம்.சங்கையா, என்.செல்வராஜ், கே.மணி, ஆர்.சடையப்பன், எம்.ஜகாங்கீர், சி.தங்கவேல், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலச் செயலாளர்கள் கே.இரவி, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம், சி.சந்திரகுமார், ஆர்.ஆறுமுகம், அ.பாஸ்கர், ஆர்.தில்லைவனம், என்.சேகர், வி.ஆதிமூலம், மாநில பொருளாளர் எஸ்.பீட்டர் துரைராஜ் ஆகியோர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நம்மிடம் கூறினார் சின்னசாமி, “தமிழ்நாடு சட்டப்பேரவையில் 12.4.2023 அன்று தொழிற்சாலைகள் சட்டத்தைத் திருத்தி மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் சட்டம் ஒரு மத்திய சட்டமாகும். அதன் “51, 52, 54, 55, 56 மற்றும் 58 ஆம் பிரிவுகளின் வகை முறைகள் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் அனைத்திலிருந்தும் அல்லது எவற்றிலிருந்தும் தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைகளின் குழு அல்லது வகை அல்லது விவரிப்பு முழுவதற்கும் அறிக்கையில் குறிப்பிடப்படலாகும். அத்தகைய காலத்திற்கு அல்லது காலங்களுக்கு விலக்களிக்கலாம்” என்பதுதான் அந்த திருத்தமாகும்.
அதாவது மேற்சொன்ன பிரிவுகளில் சொல்லப்பட்டுள்ள எதனையும் முதலாளிகள் கடைப்பிடிக்க வேண்டியது இல்லை என்று மாநில அரசு விலக்கி வைக்கிறது. எந்தெந்த தொழில்கள், எவ்வளவு காலத்திற்கு விலக்கு என்பதெல்லாம் இனி அதிகாரிகளின் உத்தரவாக வரும். அந்த விதிகளின் கீழ் இனிமேல் தொழிலாளர்கள் தமது உரிமையைக் கோர முடியாது. இதனால் தொழிலாளர்களுக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பெரும் நன்மை ஏற்படும் என்று மசோதா கூறுகிறது.
இந்தத் திருத்தத்தின்படி, இதுவரை இருந்த 8 மணி நேர வேலை, இனிமேல் ஓய்வு இடைவெளிகளை உள்ளடக்கிய கூடுதல் நேரம் மற்றும் நீட்டிக்கப்பட்ட நேரம் என மாற்றப்படும். இதன் பொருள் என்னவென்றால் காலையில் ஒரு மூன்று மணி நேரம், பிறகு இடைவெளி, மதியம் ஒரு மூன்று மணி நேரம், பிறகு இடைவெளி, இரவில் ஒரு இரண்டு மணி நேரம் என்று பிரித்து வேலை கொடுக்கலாம். எட்டு மணி நேரம் என்பது மாறாது. ஆனால் தொழிற்சாலைக்குள் 12 மணி நேரம் வரை தொழிலாளி இருந்தாக வேண்டும்.
தொழிலாளர்களுக்கு இது அதிக நன்மையை ஏற்படுத்தும் என்று முதலாளிகளும், முதலாளிகளின் சங்கங்களும் கூறியதாக மசோதாவே சொல்கிறது. இது சரிதானா என தொழிலாளர்களிடம், தொழிற்சங்கங்களிடம் அரசு ஒருபோதும் இதுபற்றிப் பேசவில்லை. தொழிலாளர்களுக்கு நன்மை பெற்றுத் தருவதற்காகத்தான், முதலாளிகளின் சங்கம் தன்னிடம் பேசும் என்று இந்த அரசு நம்பும் என்பது ஏற்கத்தக்கதாக இல்லை. இந்த மசோதாவை சட்டப்பேரவையில் விவாதிக்க விட்டிருந்தால், மாற்றுக்கருத்தை சொல்லவாவது வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் தொழிலாளர் அமைச்சர் இதை முன்வைத்த உடனேயே குரல் வாக்கெடுப்பில் சில வினாடிகளில் இது நிறைவேற்றப்பட்டு விட்டது. சட்ட மசோதாக்களை விவாதிக்க விடாமல் அவசர கதிப்போக்கில் நிறைவேற்றுவது ஜனநாயக அரசியல் அமைப்பின் உள்ளடக்கத்திற்கு எதிரானதாகும்.
ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் நீண்ட காலம் போராடி பெற்ற 150 ஆண்டுக்கால உரிமைகளில் ஒன்றான உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை 40 வினாடிகளில் பாஜக மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது தான் இப்போது நினைவுக்கு வருகிறது.
ஒன்றிய அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாக கொண்டு வந்துள்ள சட்டத் தொகுப்புகளில் தொழில், பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பும் ஒன்றாகும். இதனை ஒன்றிய ஆளுங்கட்சியின் பி.எம்.எஸ், தமிழ்நாடு ஆளும்கட்சியின் எல்.பி.எப் ஆகிய சங்கங்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன. தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் அவற்றை இன்னும் செயல்படுத்த முடியாமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
அது தாமதமாவதால், அந்தச் சட்டங்களில் சொல்லப்பட்டு இருப்பவற்றை இப்போதே தமிழ்நாட்டில் அமுலாக்குவதற்காகவே இந்தச் சட்ட திருத்தம் என ஐயத்துக்கிடமில்லாமல் மசோதா தெளிவுபடுத்துகிறது. மோடியின் வழியில் அவரை விட முந்திக்கொண்டு செல்ல முயற்சிப்பது தமிழ்நாடு அரசுக்கு அழகல்ல. தேர்வு எழுதும் பொழுது மற்ற பாடங்களில் எல்லாம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றாலும், ஒரே ஒரு பாடத்தில் போதிய மதிப்பெண் பெறவில்லை என்றால், மொத்தத் தேர்விலும் தோல்வி என்றுதான் பொருள்.
தமிழக அரசு தொழிலாளர் விஷயத்தில் தொடர்ந்து முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் சொற்படி நடந்து தொழிலாளர் உரிமைகளை பறிப்பதற்கு வழிவகை செய்து தருகிறது. பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள் என்பதை அரசின் கவனத்திற்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். அதை அரசு அலட்சியம் செய்யக்கூடாது. எட்டு மணி நேர வேலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களின் நினைவாக மேதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில், சென்னை கடற்கரையில்தான் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் முதல் முறையாக மேதினத்தை 1923ல் கொண்டாடினார். அதன் நூற்றாண்டு நிறைவு இந்த மே தினம். அதே கடற்கரையில் அமைந்திருக்கும் சட்டப்பேரவையில் 8 மணி நேர வேலையை அதிகரிக்கும் மசோதா, அவரை போற்றுபவர்களாலேயே நிறைவேற்றப்படுவது பாதை மாறுகிறது என்பதன் அடையாளமாகவே உணர்த்தப்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி 2023 ஏப்ரல் 21 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், தொழில் மையங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று கூட்டம் தீர்மானிக்கிறது.
ஒன்றிய பாஜக - மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளைக் கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூபாய் 21,000/- நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 6000/- நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும்.
மாவட்ட, மாநில மாநாடுகள், துறைவாரியான கூட்டங்கள், பிரச்சார இயக்கங்கள், ஆகஸ்ட் 9-ல் சென்னை - பெருந்திரளான அமர்வு உள்ளிட்ட அனைத்துச் சங்க இயக்கங்களில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் முழுமையாகப் பங்கெடுத்து வெற்றி பெறச் செய்வதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஏ.ஐ.டி.யு.சி. மத்திய தலைமையின் வேண்டுகோளை ஏற்று, ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் திருப்பூரில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது” எனக் கூறினார்.