
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி அமைத்துள்ள 'பள்ளி மருத்துவக் குழுவினர்' அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அவர்களுக்கு நோய்த் தொற்றுகள், சத்துக் குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் பேராவூரணி வட்டார பள்ளி மருத்துவக் குழு பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்திய மருத்துவப் பரிசோதனை முகாமில் மாணவர்கள் தருண் கோவிந்தன் (11), பிரித்திவிராஜ் (15), புனல்வாசல் கிராமத்தை சேர்ந்த அங்கன்வாடி குழந்தை சப்ரின் ஜோ (4) ஆகிய மூவருக்கும் இதயக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மருத்துவக் குழுவினர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இதய ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொண்டனர்.
பரிசோதனைகள் முடிவில் மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை உடனே கிடைக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அளவிற்கு பொருளாதார வசதி மாணவர்களின் பெற்றோருக்கு இல்லை என்பதை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், உடனே மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.
இதையடுத்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் வழிகாட்டுதலின்படி பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன் ஏற்பாட்டில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முதல் கட்ட பரிசோதனைக்காக ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுடன் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அரிமா சங்க உதவியில் தனி வேன் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் பள்ளி மருத்துவக்குழு பரிசோதனை மூலம் 3 மாணவர்களுக்கு இதய நோய் கண்டறியப்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் அரசு காப்பீடு மூலம் தனியார் மருத்துவமனையில் உடனடி சிகிச்சைக்கு அரிமா சங்கத்தின் வாகன வசதியோடு மாணவர்களை அனுப்பியதை அறிந்த பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.