கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் சங்கர்(29). பொறியாளரான இவர் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளையாடி வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. முதலில் இந்த விளையாட்டில் சங்கருக்கு வருமானம் கிடைக்கவே, நாளடைவில் அதற்கு அடிமையாகி, தான் சேமித்து வைத்த பணத்தை இழந்துள்ளார். தொடர்ந்து சூதாட்டத்தில் இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என எண்ணிய சங்கர் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த பணம், கடன் வாங்கிய பணம் என சங்கர் அனைத்தையும் இழந்துள்ளார். இதனால் சங்கர் மிகுந்த மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சங்கர் கடந்த 12 ஆம் தேதி தனது பெற்றோர்களிடம் வேலை தொடர்பாக வெளியூருக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், அவர் சொன்னபடி வெளியூருக்குச் செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். அப்போது சங்கர், தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த அவர்கள் சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சங்கர் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அதில், ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் பணம் வாங்கியிருந்ததாகவும், தன்னால் அதை திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றும், அதனால் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆன்லைன் விளையாட்டில் தமிழகத்தில் 36 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.