Skip to main content

“கல்வியை மட்டும் விட்டு விடக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

CM MK Stalin says Education should not be left behind  

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அந்தவகையில் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வில் தேர்ச்சி நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வர்.

இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் கடந்த 22ஆம் தேதி (22.04.2025) வெளியானது. இதில் அகில இந்திய அளவிலான தரவரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் 23ஆம் இடமும், தமிழக தரவரிசையில் முதலிடமும் பிடித்திருந்தார். அதே போன்று  தமிழகத்தைச் சேர்ந்த மோனிகா அகில இந்திய அளவில் 39வது இடத்தை பெற்றிருந்தார். மேலும் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதோடு தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர பாண்டியன் ஆகிய இருவரும் தேர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் இன்று (26.04.2025) நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “தமிழகத்திற்கு என்று ஒரு அறிவு முகம் உள்ளது. ஒரு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரி தமிழக காடராக ஆக இருந்தால் அவர்களுக்கு உண்டான மதிப்பே தனி. அதிலும் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், இன்னும் மதிப்பு கூடுதல் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் தேர்ச்சி பெறுவது குறைந்துவிட்டது. ஆனால், இப்போது அந்த கவலையை நீங்கள் போக்கிவிட்டீர்கள்.

இந்தியாவோட எந்த மூலைக்கு பணியாற்றச் சென்றாலும், சமத்துவம், சமூகநீதி, வாய்மை, நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து ஏழை எளிய மக்களோட உயர்வுக்காகப் பாடுபடுங்கள். உங்களுடைய சிந்தனையால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டால்  மக்களின் மனதில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும். மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்குத் தான் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்விதான் நம் ஆயுதம். எனவே எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் நாம் விட்டு விடக் கூடாது. எப்படிப்பட்ட போட்டித் தேர்வாக இருந்தாலும் நமது மாணவர்கள் வெற்றிபெறவே நான் முதல்வன் திட்டம் ஆகும். அதிகாரம் என்பது சக மனிதர்களுக்கும், சமூகத்திற்கும் உதவுவதாக இருக்க வேண்டும். எனவே மக்களின் மனதில் இடம்பெற வேண்டும். கடமையை நிறைவேற்றிய தந்தைக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள்” எனப் பேசினார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி (07.03.2023) தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் திறன் இடைவெளியைக் குறைப்பதும், மத்திய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்களின் விகிதாச்சாரத்தை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியைக் கட்டணமில்லாமல் வழங்குவதும் இப்பிரிவின் முக்கிய நோக்கமாகும். 

சார்ந்த செய்திகள்