
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி நேற்று (13.05.2025) தீர்ப்பளித்தார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி 9 குற்றவாளிகளுக்ம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் இது தொடர்பாக பேசுகையில், “நான் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது, அதாவது அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று தெளிவாக சொல்லிருக்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உறுதியாக எப்படிப்பட்ட பெரிய பொறுப்பில் இருந்தாலும், செல்வாக்கு பெற்றிருந்தாலும் குற்றவாளிகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்னேன். அது நடந்திருக்கு. அதனால் தான் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் பேசும்போது, ‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என்று சொல்லிருந்தேன். அதுதான் நடந்திருக்கு.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கும் நடந்துகொண்டு இருக்கிறது. அதுவும் இதுமாதிரி உரியத் தண்டனை வழங்கப்படும். ஆனால் உடனே எடப்பாடி பழனிசாமி தான் தான் இதற்கு காரணம்னு சொல்லிட்டு இருக்காரு. அவர் அமித்ஷாவை பாத்துட்டு வந்தார். ஏன் பார்த்துவிட்டு வந்தாரென்று நாட்டுக்கே தெரியும். ஆனால் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி வழங்கக்கோரி நான் தான் சொல்லிவிட்டு வந்தேன், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நான் தான் சொல்லிவிட்டு வந்தேன் என்று சொன்னார். இந்த மாதிரி பொய் சொல்வது தான் பழனிசாமியின் வேலையாக உள்ளது. இது பற்றி மக்களுக்கு நல்லா தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.