கோப்புப்படம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (20.11.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தென் தமிழகத்தில் அதிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிக மழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கையாக மாற்றி அறிவித்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ஒரு மிக குறுகிய இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச மழை பொழிந்துள்ளது. குறிப்பாக பகல் 11:30 மணியிலிருந்து 2:30 மணி வரை சுமார் மூன்று மணி நேரம் பெய்த கன மழை 19 சென்டி மீட்டர் என பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.