தினேஷ்குமாரின் தியாகத்துக்கு மதிப்பளித்து மதுக்கடைகளை முற்றிலும் மூடுவதற்கு அரசு முன்வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டிபட்டியைச் சார்ந்த 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவன் தினேஷ்குமார் தனது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேதனைக்குள்ளாகித் தூக்கு மாட்டி தற்கொலைச் செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அம்மாணவர் தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்துள்ளச் செய்தியானது நம் நெஞ்சை உலுக்குகிறது. ‘அப்பா நான் செத்த பிறகாவது குடிப்பழக்கத்தை நிறுத்துவாயா’ என்று அவன் எழுதியிருப்பதைப் படிக்கும் போது கண்கலங்க வைக்கிறது. ஏற்கனவே தனது தாயை இழந்த அவன் தந்தையும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தன்னையும் தனது தம்பியையும் கவனிக்க யாரும் இல்லை என்கிற மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான் என்பது தெரிகிறது. அத்துடன் தனது சாவுக்குப் பிறகாவது தமிழக அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருக்கிறான். ஒருவேளை அரசு மதுபானக் கடைகளை மூடவில்லை என்றால் தானே ஆவியாக வந்து மதுக்கடைகளை மூடுவேன் என்றும் அந்த செய்திக்குறிப்பில் பதிவு செய்திருக்கிறான்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான தனது தந்தையின் போக்குகளை எண்ணி எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருந்தால் இந்த முடிவுக்கு அவன் வந்திருக்கக்கூடும். தமிழக அரசுக்கும் இந்த கோரிக்கையை வைத்திருக்கக்கூடும். தமிழக அரசின் மீதும் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் தானே ஆவியாக வந்து மதுக்கடைகளை மூடுவேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறான். தினேஷ் குமாரின் மரணம் ஒரு வகையிலான அரச வன்கொடுமையே என்பதை உணர்த்துகிறது.
மக்கள் நலன்களைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாத ஆட்சியாளர்களுக்கு தினேஷ் குமாரின் சாவு அதிர்ச்சி ஏற்படுத்தப் போவதில்லை என்பதும் நாம் அறிந்ததேயாகும். அரசுக்கு வருமானம் என்பது மட்டுமே ஆளுவோரின் நோக்கமாக இருக்கிறது. தினேஷ் குமாரின் சாவு மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும் மனித நேயம் இல்லாதவர்கள் அம்மாணவனின் நடவடிக்கையைக் கோழைத்தனம் என்று புறம் தள்ளுவார்கள்.
மதுவை ஒழிப்போம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் தினேஷ் குமாரின் சாவுக்கு பின்னராவது மனம் இளகி மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு விரைந்து மதுக்கடைகளை மூட முன்வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
குடிப்பழக்கத்தால் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் பாழாகி வருவதை தமிழக அரசு உணர வேண்டும். குடிப்பழக்கமானது தனிநபர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தச் சமூகத்திற்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொடூரமான குற்றங்களும் பெருகுகின்றன. சாதி, மத வன்முறை வெறியாட்டங்களுக்கு இடம் அளிக்கின்றன.
எனவே, தமிழக நலன்களைக் கருத்தில் கொண்டு பள்ளி மாணவன் தினேஷ் குமாரின் தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் மதுக்கடைகளை முற்றிலும் மூடுவதற்கு அரசு முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. மாணவன் தினேஷ் குமாருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வீரவணக்கம் செலுத்துவதோடு அவனை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.