![t](http://image.nakkheeran.in/cdn/farfuture/aO7xcnzAdKBQFWMhHWuoWR5wIwpwKLcjC2g-M238YC4/1536073722/sites/default/files/inline-images/thiruvannamalai2_0.jpg)
திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ஒருவர், தன்னை இணை பேராசிரியர் தங்கபாண்டியன், உதவி பேராசிரியர்களாகவும் பெண்கள் விடுதி வார்டன்களாகவும் உள்ள புனிதா, மைதிலி இருவரும் பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தார்கள் என 15 தினங்களுக்கு முன்பு புகார் தெரிவித்தார்.
இந்த வழக்கை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் காவல்துறை என இரண்டு தரப்பும் விசாரித்துவருகிறது. இரு விசாரணை அமைப்புகளும் முதலில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ – மாணவிகளிடம் விசாரித்தபின்பே குற்றம்சாட்டிய மாணவியிடம் விசாரணை நடத்தி வித்தியாசப்படுத்தியது.என்னை விசாரித்த ஏ.டி.எஸ்.பி வனிதாவிடம் ஆடியோ உட்பட கூடுதல் ஆவணங்கள் வழங்கியுள்ளேன், இருந்தும் அவர்கள் என்னையே குற்றவாளிபோல் விசாரிக்கிறார்கள் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் பல்கலைகழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் பேரா.சாந்தி தலைமையில் 5 பெண் பேராசிரியர்கள் கொண்ட குழு செப்டம்பர் 3ந்தேதி விசாரணைக்கு வாழவச்சனூர் கல்லூரிக்கு வந்தது. கல்லூரியில் வைத்து பேராசிரியர்கள் மீது குற்றம்சாட்டிய மாணவியிடம் மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 வரை விசாரணை நடத்தியது.
அந்த மாணவி கூறிய புகாரை கிடப்பில் போட்டு, விவகாரத்தை அமுக்க காவல்துறை, பல்கலைக்கழகம் இரண்டு தரப்பும் முடிவு செய்துள்ளதாக அவர்கள் நடவடிக்கை மூலம் தெரிகிறது என்கிறார்கள் அம்மாணவிக்கு பக்க பலமாக உள்ளவர்கள்.
இந்நிலையில் இன்று செப்டம்பர் 4 ந்தேதி கல்லூரிக்கு சென்ற பாதிக்கப்பட்ட மாணவி தனக்கான வகுப்பறையில் அமர்ந்துள்ளார். கல்லூரி ஆரம்பித்ததும் அந்த வகுப்பறையில் இருந்த மாணவர்கள் - மாணவிகள், பாடம் நடத்த வந்த பேராசிரியர் உட்பட அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான மாணவி கல்லூரிக்கு வெளியே காத்திருந்த தனது தந்தை மற்றும் சிபி எம் நிர்வாகிகளிடம் இதனை தெரிவிக்க, அவர்கள் சாலை மறியல் செய்ய முடிவு செய்தனர். தகவலை கேள்விப்பட்டு அங்கு வந்த போலிஸார் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி, டீன் ராஜேந்திரனை எச்சரித்தனர். அவர் எனக்கு எதுவும் தெரியாது என பொய் சொல்லி தப்பினார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகவே போலிஸ், கல்லூரி - பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளது என நேரடியாகவே குற்றம்சாட்டுகின்றனர் சிபி எம் தரப்பை சேர்ந்தவர்கள்.