இந்தியாவை ஆளும் பாஜக அரசாங்கம் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் இந்த சட்ட திருத்ததிற்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் போராட்டத்தை கலைத்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மதியம் இஸ்லாமியர்கள் மசூதியில் தொழுகை நடத்துவது வழக்கம். வெள்ளிக்கிழமை தொழுகையில் 90 சதவித இஸ்லாமியர்கள் கலந்துக்கொள்வார்கள். அதன்படி இன்று டிசம்பர் 20ந்தேதி வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தபின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமது வலிமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என இஸ்லாமிய மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதியில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இதனால் பெரியளவில் கூட்டம் திரளும் என்பதால் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதியில் சுமார் 3 ஆயிரம் காவலர்களை குவித்தது. இதற்காக திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி சிபிசக்கரவர்த்தி மற்றும் காவலர்களை வாணியம்பாடிக்கு அழைத்திருந்தார் திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார். அவர்களும் பாதுகாப்பு பணிக்கு அங்கு சென்றுயிருந்தனர்.
தொழுகை முடிந்ததும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்து வாணியம்பாடி நகரில், பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தங்களது கண்டன குரல்களை எழுப்பினர். இதேபோல் ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.