இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடியை கண்டித்தும் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த போதிலும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். கமல்ஹாசனை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்காத நிலையில், பல்கலைக்கழக முகப்பு நுழைவு வாயில் கேட்டின் வெளியே நின்று மாணவர்களை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், "மாணவர்களை அகதிகளாக மாற்றி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நேற்று இரவில் இருந்து சாப்பிடவில்லை. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும். சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை எனில் அவை மாற்றப்பட வேண்டும். ஆட்சியாளர்களின் கையில் நேர்மை என்பது இல்லை; என் கையில் இருக்கிறது. ஐரோப்பாவில் நிகழ்ந்த சர்வாதிகாரத்தை வரி பிசகாமல் இங்கு மறுபதிவு செய்கிறார்கள்". இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.