சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி பாண்டியன் (வயது 40) . இவர் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இவர் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவமனை அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிட்டு கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கோழி பாண்டியன் மீது வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஒடி விட்டனர்.
சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அபிநவ், சிதம்பரம் சரக போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் முருகேசன் பார்வையிட்டு கொலை செய்யப்பட்டு இறந்து போன கோழி பாண்டியனின் உடலைக் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த படுகொலை காரணமாக சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கலுங்குமேடு பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் குமார், மற்றும் அவரது தம்பி ராஜேஷை பிரபல ரவுடிகள் அவரது வீட்டில் வெடிகுண்டு வீசி இருவரின் கழுத்தை அறுத்து வந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முன்பு வைத்து விட்டு சென்றார்கள். இதற்கு அப்போது பக்கத்து வீடான கோழி பாண்டியன் தான் கொலையாளிகளுக்கு அனைத்து தகவல்களையும் திட்டமிட்டு கொடுத்துள்ளதாக தகவல். இதனால் கோழி பாண்டியனை தற்போது அந்த இரட்டைக் கொலையின் எதிரொலியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.