'

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 21ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவிற்குக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவிலில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விசேஷப் பூஜைகள் சாமி ஊர்வலம் என நடைபெற்றது. இந்நிலையில், 29-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், 30-ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற்றது.
இதில் 30 -ஆம் தேதி அதிகாலை 3 மணியிலிருந்து 8 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் மகாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இரவு முதல் கோவிலில் காத்திருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அபிஷேகத்தைப் பார்த்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் திருவாபரணம் அலங்காரத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் வெளியூர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் 'சிவசிவ' கோஷங்களை எழுப்பி தரிசனத்தைக் கண்டுகளித்தனர்.

அதே நேரத்தில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் பின்பற்றவில்லை. கோவிலுக்கு உள்ளே செல்லும் பக்தர்கள் முகக் கவசம், சமூக இடைவெளி, கைகளைச் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் கடைப்பிடிக்கவில்லை.
நீதிமன்றம் ஒரு மணி நேரத்திற்கு 200 பேரை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதற்கு காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதன் விளைவாக தமிழக அரசின் உயரதிகாரிகள், இதில் கலந்துகொள்ள வேண்டாம் என வாய்மொழி உத்தரவிட்டதின் பேரில், ஒரே நேரத்தில் கோவிலில் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை பொதுமக்கள் பக்தர்கள் ஒன்று கூடினார்கள். தற்பொழுது 'உருமாறிய கரோனா' பரவும் காலகட்டத்தில் ஒரே இடத்தில் 20 ஆயிரம் பேர் ஒன்று கூடிய சம்பவம் பல்வேறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.