கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த மாணவி மர்மான முறையில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.
பள்ளி மாணவி மர்ம மரணத்தில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவி சாந்தி மற்றும் இரண்டு ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளிவந்தனர். மேலும், சென்னை உயர் நீதிமன்றம் பள்ளி மாணவி தற்கொலைதான் செய்துகொண்டார் எனவும் தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து மாணவியின் தாய் செல்வி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவி தற்கொலை என உயர்நீதிமன்றம் சொன்ன கருத்துக்களை வழக்கை விசாரிக்கும் கீழமை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என தெரிவித்தது.
இந்நிலையில் மாணவியின் தாய் செல்வி நேற்று கடலூர் எஸ்.பி.யிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஸ்ரீமதி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் தற்கொலை தான் என உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்திருந்தோம். அந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், இதனை தற்கொலை என சொல்வதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. கீழமை நீதிமன்றம் தான் இதனை முடிவு செய்யவேண்டும். ஸ்ரீமதி மரணத்தை சின்னசேலம் காவல்துறையும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையும் சந்தேக மரணம் என்று தான் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு தனிப்பட்ட யூடியூபர் கார்த்திக் பிள்ளை என்பவர் தொடர்ந்து ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டார் என்றே பேசி வருகிறார். அதேபோல், என்னைப் பற்றியும் என் மகளைப் பற்றியும் அவதூறாக பேசுகிறார். இதனால், அவர் மீது எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளோம். இது தொடர்பாக ஏற்கனவே வேப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். ஆனால், அங்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதன் காரணமாக இன்று மாதர் சங்கம் மூலமாக எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுத்துள்ளோம்.
அந்தப் புகார் மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி., ‘இது கொலையா அல்லது தற்கொலையா என பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. வழக்கு எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதன்படி தான் பேச வேண்டும். நிச்சயமாக அவர் போட்டுள்ள வீடியோக்களை டெலிட் செய்வோம். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.