நெல்லை மாவட்டத்தின் பாப்பாக்குடியை அடுத்த கீழப்பாப்பாக்குடி வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக், கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களின் ஆறு மாத பெண் குழந்தை பிரியங்கா. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணாமல் போகவே பதை பதைப்போடு பாப்பாக்குடி போலீசில் புகார் செய்திருக்கிறார் இசக்கியம்மாள்.
இதையடுத்து குழந்தையைக் கடத்தியவர்களைப் பிடிக்க நெல்லை எஸ்.பி.சரவணனின் உத்தரவின் பேரில் அம்பை டி.எஸ்.பி. பிரான்சிஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் அடங்கிய தனிப்படையினர் வேதகோவில் தெருவிலிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது அதே தெருவைச் சேர்ந்த கனியம்மாள், முத்துச்செல்வி ஆகியோர் வீடு புகுந்து குழந்தையைத் திருடிச் செல்வது தெரிந்தது.
இசக்கியம்மாள் தூங்கிக் கொண்டிருந்ததை நோட்டமிட்ட இவர்கள், தூங்கிய பெண் குழந்தையைக் கடத்தி குழந்தையில்லாத தம்பதிக்கு அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கும் திட்டம் போட்டது தெரியவந்ததுடன், குழந்தையைக் கடத்த இவர்களுக்கு ஆலங்குளத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உறுதுணையாகச் செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரையும் கைது செய்த தனிப்படையினர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தை கடத்தப்பட்டு 36 மணி நேரத்திற்குள் குழந்தைக் கடத்தல் கும்பலை வளைத்து குழந்தையையும் மீட்ட தனிப்படையினரை எஸ்.பி.சரவணன் பாராட்டினார். இந்தக் கும்பல் வேறு பகுதிகளிலும் குழந்தைகளைக் கடத்தியதுண்டா என்ற மேல் விசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.