கடந்த வருடம் ஜூன் 22 ஆம் தேதி அதிமுகவின் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல்முறையாக இன்று அதிமுக பொதுக்குழு கூடியுள்ளது.
அதிமுகவின் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களை இபிஎஸ் முன்மொழிய, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்துள்ளார்.
ஒரு பக்கம் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், கோவையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு 'என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த கூட்டமானது தொடங்கி நடைபெற்றுள்ளது.
ஓபிஎஸ்-இன் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இக்கூட்டத்திற்கு வந்துள்ளனர். இன்றிலிருந்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை இந்த சுற்றுப்பயணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பின்னால் வந்தவர்கள் முதலில் பொதுக்குழுவைக் கூட்டி என்னவெல்லாம் அங்கு நடந்தது என்று உங்களுக்கு தெரியும். இங்கு சில பேர் தண்ணீர் பாட்டிலை கையில் வைத்திருக்கிறீர்கள். அவர்களைப் பார்த்தாலே விழித்துப் பார்க்கிறேன். உண்மையிலேயே அவர்கள் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது என்ன நோக்கத்திற்காக என்று. நல்ல நோக்கத்திற்கு தான் நீங்கள் வைத்துள்ளீர்கள். சில அரங்கேற்றம் எல்லாம் அங்கு நடந்தது. எங்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு வன்முறை மூலமாக பொதுக்குழுவை கூட்டினார்கள். 228 பேரை வைத்து இன்றும் பொதுக்குழுவை கூட்டி கழகத்தை அபகரிப்பு செய்து. நான்கு வருஷம் முதலமைச்சராக இருந்த ருசி அவரை விடவில்லை. திரும்பவும் இந்த நாட்டை சூறையாடி, கொள்ளையடித்துச் செல்ல வேண்டும் என்று தான் இந்த பொதுக்குழுவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை'' என்றார்.