புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் - வேம்பங்குடி மேற்கு கலைவாணர் திடல் விளையாட்டு மைதானத்தில் நடந்துவரும் கைப்பந்து போட்டியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடக்கும், இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் அணி, எஸ்.ஆர்.எம் அணி, ஐ.சி.எஃப் அணி, இந்தியன் வங்கி அணிகளும், மகளிர் பிரிவில் சிவந்தி கிளப் அணி, எஸ்.ஆர்.எம் அணி, ஐ.சி.எஃப் அணி, பி.கே.ஆர் அணிகளும் பங்கேற்கிறது.
சனிக்கிழமை இரவு 2 வது நாள் போட்டிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அமைச்சர்களுக்கு கைப்பந்து வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்தனர்.
பின்னர், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் கைப்பந்து சங்கம் தொடங்கி, அதில் கௌதமசிகாமணி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் சங்கத்தை நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி வந்ததும் சங்கத் தலைவரிடம் சாவி கொடுக்கப்பட்டது.
அதேபோல, ஜூலை 28- ஆம் தேதி அன்று மாமல்லபுரத்தில் 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏ.ஆர்.ரஹ்மான் இசையுடன் தொடங்கி ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று இளையராஜா இசையுடன் நிறைவடைகிறது" என்றார்.