அமெரிக்காவின் முக்கிய வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிதி அதிகாரியாக (சிஎஃப்ஒ) சென்னையில் பிறந்து வளர்ந்த திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்படவுள்ளார்.
திவ்யா சூர்யதேவரா (39) எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகச் செயல்படவிருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்.) அறிவித்துள்ளது. தற்போது இதன் தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் ஸ்டீவன்ஸ் ஓய்வுக்குப் பின் அந்தப் பதவிக்கு சூர்யதேவரா வரவுள்ளார்.
திவ்யா சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர். தன் 22ஆம் வயதில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து, அங்குள்ள முதன்மைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டில் எம்.பி.ஏ படித்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு தொட்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளில் இருந்து வந்துள்ளார். 2017 ஜூலை முதல் இதனுடைய கார்ப்பரேட் நிதி துணைத் தலைவராக இருக்கிறார். இதற்கு முன்னதாக யுபிஎஸ், பி.டபின்யூ.சி. ஆகிய பன்னாட்டு நிறுவனங்களில் இவர் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘ரியல் சிம்பள்’ இதழுக்கு சூர்யதேவரா அளித்துள்ள பேட்டியில், சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் மட்டுமே இவருடைய இரு சகோதரிகளுடன் வளர்ந்துள்ளதாகக் கூறுகிறார். மேலும், பள்ளிக்கூடத்தில் சுற்றுலா சென்றால்கூட அதற்குத் தன்னிடம் பணம் இல்லாத சூழல் இருந்ததாகவும் நண்பர்களிடமே அனைத்துக்கும் கடன் பெறவேண்டிய நிலையில் தான் வாழ்ந்ததாகவும் நினைவுகூர்கிறார்.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஒ மேரி பார்ரா கூறும்போது, திவ்யாவின் அனுபவமும் தலைமைத்துவப் பண்பும் தங்களின் கடந்த சில ஆண்டுகளின் வணிகச் செயல்பாடுகளில் காத்திரமானப் பங்கை அளித்துள்ளது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
- நாகூர் ரிஸ்வான்