சென்னை நொளம்பூர் பகுதியில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளியின் 2023-24 கல்வி ஆண்டிற்கான ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. நிகழ்விற்கு வருகைபுரிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை பேண்ட் வாத்தியங்கள் முழங்க தலைமையாசிரியரும், மற்ற ஆசிரியர்களும் வரவேற்றனர். நிகழ்வானது எல்கேஜி மாணவிகளின் நடனத்துடன் ஆரம்பமானது. எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் வகுப்பு வாரியாக கருத்தாழமிக்க நாடகங்கள், வண்ண உடையுடனும் கூடிய நடனங்களை நிகழ்த்திக் காண்பித்தார்கள். இது காண்போரை ரசிக்க வைத்தது
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய சென்னை மாநகராட்சியின் 143வது மாமன்ற உறுப்பினருமான வே.ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார். வண்ண வண்ண கொடிகளாலும், விளக்குகளாலும் அப்பகுதி முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருந்தது. முகப்பேர், நொளம்பூர், மதுரவாயில் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகப்படியான தனியார் பள்ளிகள் இயங்கி வந்தாலும் அதற்கு நிகராக அரசுப் பள்ளியும் சிறப்பாய் திகழ முடியும் என்று, இந்த ஆண்டு விழாவை தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.