மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின் (31). இவர் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.எச்.டி படித்து வந்தார். சச்சின் குமார் தனது நண்பர்களுடன் வேளச்சேரியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சச்சின் குமார் ஜெயின், நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றுள்ளார். ஆனால், கல்லூரியில் காலை வகுப்பு முடிந்ததும் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், சச்சின் குமார் ஜெயினுடன் தங்கியிருந்த மாணவர்கள் கல்லூரி முடித்து வீடு திரும்பியுள்ளனர். அப்போது சச்சின் குமார் ஜெயின் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு மரணித்த நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு பதறிய அவரது நண்பர்கள், உடனடியாக வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வேளச்சேரி போலீஸார், சச்சின் குமார் ஜெயினின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சச்சின் குமார் ஜெயின் நண்பர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு அவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில் ‘என்னை மன்னித்து விடுங்கள்; நான் நலமாக இல்லை’ என ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்திருக்கிறார். போலீஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.