போயஸ்தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து, போயஸ் கார்டன் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது -
மனுதாரர் தரப்பு:
கரோனா நேரத்தில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் மனுதாரர் சங்கத்தின் எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்தும் பணி தொடர்கிறது. சட்ட விதிகளை மீறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி:
என்ன தகுதி அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது?
மனுதாரர்:
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை.
நீதிபதி:
இது பொதுநலம் சம்பந்தப்பட்டது. ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு மறுபரிசீலனை செய்ய... எப்படி அரசு செயல்படுகிறது எனத் தெரியவில்லை? நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வர் அதிகாரப்பூர்வ இல்லமாக அறிவிக்கக் கூறியது.
மனுதாரர்:
500 பேருக்கு மேல் குடியிருப்போர் சங்கத்தில் உள்ளனர். குறுகிய சாலை மற்றும் சமூக பாதிப்பு மதிப்பீடு செய்யவில்லை. விசாரணை நடந்தது. ஊரடங்கு நேரத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவசரம் காட்டப்படுகிறது. சட்டபூர்வ வாரிசுகளை விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப் பயன்பாடு என்ன உள்ளது?
சமூக பாதிப்பு மதிப்பீட்டின் போது குடியிருப்பு வாசிகளின் குறைகள் கேட்கப்படவில்லை. அறிக்கை நகலும் வழங்கப்படவில்லை. கையகப்படுத்துவது தொடர்பான விசாரணை முழுவதும் கண்துடைப்பாகவே நடந்தது.
அரசுத்தரப்பு ஏ.ஜி.:
அவசரம் இல்லை. 5/10/2017 முதல் துவங்கியது. இது முதல் நினைவில்லம் அல்ல. காமராஜர், வ.உ.சி. உள்பட 20-30 நினைவில்லங்கள் உள்ளன. சுற்றுலாத் துறை பராமரிக்கிறது. 5/10/2017 -க்கு பின் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளாகிறது. ஏற்கனவே, பொது நல வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் அடிப்படை உரிமை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. விதிமீறல்களைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நினைவில்லம் அமைக்காமல், முதல்வர் இல்லமாக மாற்ற நீதிமன்றம் கருத்துதான் தெரிவித்தது. அது அரசின் பரிசீலனையில் உள்ளது.
இல்லத்தில் உள்ள அசையா சொத்துகளைக் கையகப்படுத்தவே, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்தச் சொத்துகளை மதிப்பீடு செய்ய, இழப்பீடு நிர்ணயிக்க, அதிகாரி நியமிக்கவும்,நினைவில்லத்தைப் பராமரிக்க ஜெயலலிதா அறக்கட்டளை அமைக்கவும் தான் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கையகப்படுத்தும் நடவடிக்கை இறுதி முடிவை எட்டவில்லை. அப்போது, மனுதாரர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும். நினைவில்லத்தைப் பார்வையிட மக்கள் வருவார்கள் என்பதால் எதிர்க்கிறார்கள். தற்போதைய நிலையில், முன் கூட்டியே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. அச்சத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தலையிட எந்தக் காரணமும் இல்லை.
ஏ ஏ ஜி ராஜகோபால்:
2019-இல் தான் சங்கம் துவங்கப்பட்டுள்ளது. 2017-இல் இருந்தே நடவடிக்கைகள் மனுதாரர்களுக்கு தெரியும். எந்த அவசரமும் காட்டவில்லை. எல்லா விசாரணையிலும் அப்பகுதிவாசிகள் கலந்து கொண்டுள்ளனர்.
2017-இல் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கி விட்டன. போயஸ்கார்டனில் வசிப்பவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சமூக பாதிப்பு மதிப்பீடு ஆய்வின் போது, குடியிருப்புவாசிகளின் ஆட்சேபங்களும் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இறுதி முடிவை எட்டவில்லை.
ஆகவே, ஜெயலலிதாவுக்கு அதிக தொண்டர்கள் உள்ளதால், தமிழக மக்கள் அவரது இல்லத்துக்கு வருகை தந்து பார்வையிடுவதற்காக, அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. நினைவு இல்லமாக மாற்றுவது புதிதல்ல. மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற பல தலைவர்களின் இல்லங்கள் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளன.
மனுதாரர் கூறுவது போல, இதில் எந்தப் பொது நலனும் சம்பந்தப்படவில்லை. ஏராளமான மக்கள் வருகை தருவர்; இடையூறு தருவர் என்ற மனுதாரர் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளதில் இருந்து, அவருக்கு ஏராளமான தொண்டர்கள் உள்ளனர் என்பது உறுதியாகிறது. அதிகாரிகள், குடியிருப்புவாசிளின் ஆட்சேபங்களைக் கருத்தில் கொள்ளாமல், அவசர கதியில் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறும் குற்றச்சாட்டை பொறுத்தவரை, ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படும் என அரசுத்தரப்பு தெரிவித்தது.
இந்த நடவடிக்கையில் தலையிட முடியாது. உயர்நீதிமன்ற ஆலோசனை கருத்தில் கொள்ளப்படவில்லை என்ற வாதம் நிலைத்து நிற்கவில்லை. காரணம், அதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடையில்லை என்றும், அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனவும் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.