மருத்துவரிடம் போனதும் அவர் சொல்லும் முதல் அறிவுரை, நிறைய பழங்களை சாப்பிடச் சொல்லுங்கள் என்று. அதில் தான் நம் உடலுக்கு தேவையான சத்துகளும், நோய் எதிர்ப்பு சகத்திகளும் இருக்கிறது. தெம்பில்லை என்று அதற்காக ரசாயனம் கலந்த பல பல டானிக்குகளை வாங்கி குடிப்பதைவிட பழங்களை சாப்பிடலாம் என்று சொல்வது வழக்கம்.
அதே போல உறவினர்கள், நண்பர்கள், என்று யாரைப் பார்க்கப் போனாலும் அவர்களுக்கு பழங்களை வாங்கிக் கொண்டு போய் கொடுத்துவிட்டு நலம் விசாரித்து வருவதும் வழக்கம். ஆனால் சமீப காலமாக பழங்கள் சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். காரணம் சத்துக்காக பழங்களை சாப்பிட்டது அந்தக் காலம் இப்ப நோய் உற்பத்திக்காக சாப்பிடுவது போல ஆகிவிடுகிறது என்கிறார்கள்.
அனைத்துப் பழங்களும் பளிச்சென்று கவர்ச்சியாக இருக்கவும், பிஞ்சிலேயே பழம் போல காட்டவும் இப்படி ரசாயனம் கலவையை பழங்களில் காய்களில் தெளித்து அவற்றை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்து வைக்கிறார்கள். இந்தப் பழங்களை சாப்பிடும் போது வயிற்று வலியில் தொடங்கி பல பல உபாதைகள் ஏற்படுகிறது.
அதனால் தான் தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டும் பழங்கள் வாங்குகிறோம். வாங்கும் பழங்களை நல்ல தண்ணீரில் கொஞ்ச நேரம் ஊர வைத்து கழுவிய பிறகு சாப்பிட வேண்டியுள்ளது. குழந்தைகள் பழங்களைப் பார்த்ததும் அப்படியே எடுத்து கடிப்பதால் எதாவது செய்யுமோ என்ற அச்சம் உள்ளது என்கிறார்கள் பழப்பிரியர்கள்.
ரசாயனம் கலக்காத பழங்களாக பலா, வாழைப் பழங்கள் இருந்து வந்தது. ஆனால் தற்போது அவற்றிலும் ரசாயனம் எனும் விஷம் கலக்கப்படுவதை கானொளிகள் மூலம் காணமுடிகிறது.
அதாவது வாழைப் பழங்களை முன்பு பெரிய கிடங்கில் வைத்து காற்று போகாமல் மூடி அதற்குள் புகையை செலுத்தி ஒரு நாள் முழுவதும் புகையை அந்த கிடங்கிற்குள் சேமித்து வைத்து அடுத்த நாள் பிரித்து வாழைத் தார்களை எடுத்து தண்ணீர் தெளித்து வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பழமாகும். ஒரு சணல் சாக்கில் வாழைத் தாரை கட்டிவைத்து அதற்குள் சாம்பிராணி புகை போட்டு வைத்தால் அடுத்த நாள் பழுக்க தொடங்கும்.
ஆனால், கடந்த சில வருடங்களாக விவசாயிகள் வாழைத் தாரை கமிசன் கடைகளுக்கு கொண்டு வரும் வரை காயாக உள்ளது. அதன் பிறகு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் லாரியில் ஏற்றும் போதும், சில்லரை பழ வியாபாரிகள் கடைகளில் வாழைத் தார்களை இறக்கி வைக்கும் போது ரசாயனம் கலந்த கலவையை வாழைக்காய்களில் தெளித்து வைத்துவிடுவதால் சில மணி நேரத்திலேயே அனைத்து காய்களும் மஞ்சள் வண்ணத்தில் பழமாக தெரிகிறது.
வியாபாரிகள் தங்களின் பணத் தேவைக்காக காய்களையும் அவசரமாக ரசாயனம் தெளித்து பழமாக்குவதால் பாதிப்பு அந்தப் பழங்களை வாங்கிச் சாப்பிடும் குழந்தைகள், பொதுமக்களுக்கு தான் என்பதை அவர்கள் உணரவில்லை. அதனால் வாழைப் பழங்கள் வாங்கவும் பொதுமக்கள் யோசிப்பதால் வாழை உற்பத்தி விவசாயிகளின் நிலை தான் வேதனையாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் உள்ள கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், புள்ளாண்விடுதி, கருக்காக்குறிச்சி, கொத்தமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களில் பிரதான விவசாயம் வாழை. வாழை விவசாயத்தை வைத்து வாழ்ந்த குடும்பங்கள் ஏராளம்.
கஜா புயல் ஒட்டுமொத்தமாக விவசாயம், மரங்களை அழித்துவிட்ட நிலையிலும் இந்த விவசாயிகளின் ஒரே நம்பிக்கையாக இருந்தது வாழை. சில வருடங்கள் வாழை விவசாயம் செய்தால் இழந்ததை கொஞ்சம் மீட்கலாம் என்று நினைத்து கடந்த ஆண்டைவிட புயலுக்கு பிறகு அதிகமான விவசாயிகள் வாழை பயிரிட்டனர்.
தற்போது அறுவடைக்கு வாழைத்தார்கள் வருகிறது. ஆனால் விலையோ கடும் வீழ்ச்சி ஒரு கிலோ ரூ. 5 க்கு கூட வாங்க வியாபாரிகள் வரவில்லை. பல வாழைத்தார் கமிசன் கடைகளை விடுமுறையும் விட்டு சென்றுவிட்டனர். காரணம் வாழைப் பழங்களிலும் ரசாயனம் தெளிக்கப்படுவது குறித்த பயத்தால் வாழைப்பழங்களையும் சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்கிறார்கள் விவசாயிகள்.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் வாழைத் தார்களை பழுக்க வைக்க ரசாயனம் தெளிக்கும் வீடியோ வேகமாக பரவிவருகிறது. இதனைப் பார்க்கும் ஒவ்வொருவரும் வாழைப்பழங்களையும் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.
ஒரு சில வியாபாரிகள் பணத்தாசையில் இப்படி ரசாயனம் தெளிப்பதால் ஒட்டுமொத்தமாக வாழை விவசாயிகள் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இவற்றை எல்லாம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை தூரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாய மக்கள்.