திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, ஆத்தூர்குப்பம், பட்டுவெள்ளையன் என்கிற பகுதிகளில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் வாழும் மக்கள் யாராவது இறந்தால் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் அருகே ஆற்றோம் உள்ள பகுதியில் காலம் காலமாக அடக்கம் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நில உரிமையாளர்கள் எங்களுக்கு சொந்தமான நிலத்தில் சுடுகாடு உள்ளது. எனவே அங்கே பிணங்களை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் சுடுகாடு இடம் தொடர்பாக பல்வேறு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக கூறுகின்றனர். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
சமீபத்தில் பத்மாவதி என்கிற பெண்மணி, பாம்பு கடித்து இறந்த நிலையில் விவசாய நிலத்தில் உள்ள ஆற்றோரம் சுடுகாட்டில் அடக்கம் செய்ய சென்றனர். நில உரிமையாளர் எங்கள் நிலத்தில் பிணம் எடுத்து வரக்கூடாது என்று தகராறு செய்ததை தொடர்ந்து காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து உடலை அடக்கம் செய்ய வைத்துள்ளனர்.
பின்னர் சுடுகாடாக பயன்படுத்திவரும் அவ்விடம் யாருக்கு சொந்தம் என்பதை அளவிட்டு அதன்பின் முடிவு செய்துக்கொள்ளலாம் என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியிருந்தநிலையில், இரவோடு இரவாக சுடுகாட்டில் இருந்த 45க்கும் மேற்பட்ட பிணங்களை ஜேசிபி மூலம் அகற்றி அவ்விடத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் டிசம்பர் 17ஆம் தேதி, நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலம் சென்றுள்ளனர். அங்கு வட்டாச்சியர் இல்லாததால், அலுவலக வாயிலில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சுடுகாடும்மில்லை, அங்கே புதைக்கப்பட்ட என்னுடைய தாய் தந்தை இல்லை, என்னுடைய உறவினர் கல்லறையை காணவில்லை என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர், பொதுமக்களிடம் மனுவை வாங்கிக்கொண்டு விசாரணை நடத்தி அது சுடுகாட்டுயிடமாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதி தந்தபின், அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.