ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தையடுத்துள்ள தாளவாடி அருகே வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான மான், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிறுத்தை, புலி மற்றும் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், நேற்று 1ஆம் தேதி இரவு 9.00 மணியளவில் தாளவாடியைச் சேர்ந்த இரண்டு பேர் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
கும்டாபுரம் என்ற மலைக் கிராமம் அருகே சிலர் வாகனத்தில் சென்றபோது தீடீரென சிறுத்தை ஒன்று சாலையில் சாவகாசமாக உலா வந்துள்ளது. இதைக் கண்டு வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட தூரம் சாலையில் நடந்து சென்று திரும்பிப் பார்த்த அந்தச் சிறுத்தை காரில் உள்ளவர்களைப் பார்த்துப் பார்த்து ‘இது என் ஏரியா, எங்கள் வசிப்பிடம்... இங்கே உங்களுக்கு என்ன வேலை?’ என மிரட்டுவது போல் முறைத்துப் பார்த்து உறுமிக் கொண்டே ஒரு சப்தம் எழுப்பிவிட்டு பின்னர் காட்டுக்குள் சென்றுள்ளது. அதை அவர்கள் செல்ஃபோனில் படம் பிடித்தனர். மக்கள் வசிக்கும் கிராம வனச்சாலையில் சிறுத்தை நடமாடுவதால் மலைக் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.