ஆருத்ரா மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அவர் பேசுகையில், ''பொருளாதார குற்றப்பிரிவில் இதுவரை நான்கு மிகப்பெரிய வழக்குகள் பதிவு செய்து விசாரணையில் இருந்து வருகிறது. ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எஃப்.எஸ் மற்றும் எல்பின் இந்த நான்கு வழக்குகளிலும் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆருத்ரா கம்பெனி 2020 வருடத்திலிருந்து 2022 வரை 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக டெபாசிட்டாளர்களிடம் கூறி மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளது.
இதில் மொத்தம் பெறப்பட்ட முதலீட்டாளர்களின் புகார்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரம். இதில் ஏமாற்றப்பட்ட தொகை சுமார் 2,438 கோடி. இந்த வழக்கில் மொத்தம் 21 குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆறு நிறுவனங்கள் அடங்கும். இதுவரை எட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 நபர்கள் இயக்குநராக செயல்பட்டவர்கள். இவ்வழக்கு தொடர்பாக 54 இடங்களில் சோதனைகள் நடைபெற்றுள்ளது. சோதனைகளில் 5 கோடியே 57 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தங்கம் 2.2 கிலோ மற்றும் வெள்ளி 1.9 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது. 18 கார்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
120 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தொகை 96 கோடியாகும். மேலும் 97 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபமாக 15 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு அதனையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஹரிஷ், தீபக்கோவிந்த் பிரசாந்த் நாராயணி ஆகிய குற்றவாளிகளுக்கு எல்.ஓ.சி வழங்கப்பட்டுள்ளது. ராஜசேகர், மைக்கேல், உஷா ஆகிய மூவரும் கம்பெனியின் இயக்குநர்கள் ஆவார்கள். அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதால் அவர்களை கைது செய்ய ஆர்.சி.என் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 550 முதலீட்டாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 250 சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.'' என்றார்.