பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகளும், கழிவறைகளும் கட்டாமலேயே கட்டியதாக வாழ்த்து கடிதத்தை மத்திய அரசு அனுப்பியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பாரத பிரதமர் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை வீடுகள் கட்டாமலேயே கட்டிமுடிக்கப்பட்டதாக கூறி பல கோடி ரூபாயை கொள்ளையடித்து கண்டுபிடிக்கப்பட்டு, அதில் தொடர்புடைய அதிகாரிகள் சிலர் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மன்னார்குடி அடுத்துள்ள தேவேந்திரபுரம், பாமணி, கர்ணாவூர் , தருசுவேளி உள்ளிட்ட கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வீடுகளை நன்கு பராமரித்து, சுத்தமாக வைத்து பாதுகாப்புடன் வாழ வேண்டும் என பொதுமக்கள் பலருக்கும் மத்திய அரசிடமிருந்து வாழ்த்து கடிதம் வந்திருக்கிறது, கடிதத்தை கண்ட பொதுமக்கள் சிட்டிசன் படத்தை மீஞ்சும் அளவிற்கு ஊழல் நடந்திருக்கே என மூச்சு, பேச்சு இல்லாமல் வாயடைத்து நிற்கின்றனர்.
இது குறித்து அங்குள்ள சமுக ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம், "கர்ணாவூர் ஊராட்சியில் சுமார் 1,500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அனைவரும் சாதாரன ஏழை, கூலி தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்காக கடந்த 2018 - 2019 ஆண்டிற்கான பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் மத்திய அரசின் கழிவறை திட்டத்தில் கழிவறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்ணாவூர் ஊராட்சியில் உள்ள பயனாளிகளுக்கு 274 வீடுகள் மற்றும் 890 கழிவறைகள் கட்டாமலே ஊராட்சி செயலர் அதிகாரிகள், ஆளும் கட்சியினர் உள்ளிட்டோர் கூட்டணி அமைத்து சில பயனாளிகள் பெயரில் போலி ஆவணங்கள் தயார்செய்து பல கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளனர்.
இந்நிலையில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் முழுமையும் பயனாளிகளுக்கு அரசு கட்டி கொடுத்த வீடுகளை பார்வையிடுவதற்காக திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் வீடுகள் மற்றும் கழிவறைகளை கட்டாமலே கட்டியதாக கணக்குக்காட்டி மோசடி செய்துள்ளது கண்டுபிடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலமையில்தான் வீடு கட்டாதவர்களுக்கு வீடு கட்டியதற்கான வாழ்த்து செய்தி மத்திய அரசிடம் இருந்து கடிதமாக வந்துள்ளது. கடிதத்தில் வீட்டை தூய்மையாக பராமரித்து வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என தெரிவித்துள்ளனர், இது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சியதுபோல் இருக்கிறது". என்கிறார் ஆதங்கமாக.
இந்தக்கூத்து அடங்குவதற்குள் நாகப்பட்டினத்தில் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டியதாக அங்குள்ள மக்களுக்கும் வாழ்த்து கடிதம் வந்திருக்கிறது. அந்த கடிதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓய்வு பெற்ற துணை தாசில்தார் ஒருவர் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருக்கிறார்.