இந்தியா முழுவதும் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதேபோல் கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக உட்பட எதிர்க் கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் துணை ஆட்சியர் அலுவலகம் அருகே, சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட திமுகவினர் மாட்டுவண்டி, தட்டு வண்டி, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களைத் தட்டு வண்டி மூலம் இழுத்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாட்டு வண்டி ஓட்டி வந்தார். இந்த ஊர்வலத்தின்போது மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், கையில் பதாகைகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர்.
இப்போராட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பேசும்போது, “மத்திய மாநில அரசுகள் தினந்தோறும் பெட்ரோல் விலையை உயர்த்திவிடுகின்றனர். இதனால் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் விலை உச்சத்தைத் தொட்டுவிட்டது. ஆகவே, மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையும் கட்டுப்படுத்தப்படும்” என்று கூறினார்.