நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதை கண்டித்து சென்னை அண்ணாநகரில் உள்ள CBSE மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன், ‘’நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். எண்ணற்ற போராட்டங்களை நடத்தினோம். ஆனால் மத்திய அரசு நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டது.
போராட்டம் நடத்தியும் மத்திய மாநில அரசுகள் கண்டுக்கொள்ள வில்லை. வெளி மாநிலத்தில் எழுத தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பக் கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த தீர்ப்பிற்கு தடை வாங்கியது. தமிழகத்தில் இருந்து வரும் வழக்குகள் காவிரி வழக்கு உட்பட என்றாலே ஒருவிதமாக நடத்துகிறது.
ஒரு லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வுக்கு மையங்கள் அமைக்க இடமில்லை என்று கூறுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும். தமிழகத்தில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்படும் போது பல லட்சம் பேர் எழுதுகின்றனர். எனவே உடனடியாக தேர்வு மையங்களை தமிழகத்திலேயே மாற்ற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை பரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு மொழி பிரச்சினை,
மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத கூடாது. மருத்துவம் படிக்கக்கூடாது என மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாற்று மையத்தை உருவாக்க எங்களது போராட்டம் தொடரும்’’என்றார்.