தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., காவலர் ஆகிய மூவரை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவையடுத்து, தூத்துக்குடி ஏ.எஸ்.பி. குமார் மற்றும் சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகிய மூவரும் இன்று (30/06/2020) காலை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி, 'தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பிரேதப் பரிசோதனையின் அறிக்கையின் அடிப்படையில் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. முதல் நிலை பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. 'நீதி கிடைக்கும் என ஜெயராஜ் குடும்பத்தினர் நம்புகின்றனர்; எனவே ஒரு நொடிகூட வீணாகக்கூடாது'. சி.பி.ஐ. உடனடியாக வழக்கு விசாரணையைக் கையில் எடுக்க இயலுமா? சி.பி.ஐ. விசாரிக்கும் வரை நெல்லை சி.பி.சி.ஐ.டி. உடனடியாக வழக்கு விசாரணையைக் கையில் எடுக்க இயலுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இன்று (30/06/2020) மதியம் 12.00 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும் மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவல் அவமதித்தது அதிர்ச்சியளிக்கிறது என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். இதனிடையே மன அழுத்தத்தால் மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் தவறாக நடத்துக்கொண்டுள்ளனர் எனத் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசிய ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., காவலர் மீதான அவமதிப்பு வழக்கு விசாரணை தொடரும். நீதிமன்ற அவமதிப்புக்குள்ளான ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., காவலர் நான்கு வாரத்தில் விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பல அனுமதிகளைப் பெற்று சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் முன் தடயங்கள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அச்சத்துடன் சாட்சியமளித்த காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தந்தை, மகன் மரண வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கும் முன் நெல்லை மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இன்றே கையில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.